அமெரிக்கா போற்றும் தமிழ் பெருவிழா!!
தமிழரின் பெருமையைப் பகிர்ந்த வடகரோலினா ஆளுநர் – ஒரு வரலாற்றுப் பதிவு!
2025ஆம் ஆண்டிற்கான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் தமிழ் மகாநாடு, வடகரோலினா மாநிலத்தின் தலைநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, 2025 ஜூலை மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாக' வடகரோலினா மாநில ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்டது – இதுபற்றி வடகரோலினா மாநில ஆளுநர் ஜோஷ் ஸ்டைன் வெளியிட்ட உரை:
"2025 ஜூலை மாதத்தை 'தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாக' வடகரோலினா மாநிலத்தில் அறிவிக்கிறேன் மற்றும் இதன் அனுசரணையை அனைத்து குடிமக்களுக்கும் பரிந்துரைக்கிறேன்."
இது உலகத் தமிழர்களுக்கான மிகுந்த மரியாதை மற்றும் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்தது.இப்பிரகடனத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பெற முனைந்தவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி நாகலிங்கம் சிவயோகன் அவர்கள். அவரது திருநாமத்தில், வடகரோலினா தமிழர் சங்கம் வழங்கிய “தமிழ் மரபு விருது” தமிழ் பணிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இம்முறை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவைத் தலைவர். விஜய் மணிவேல், மேடையில் கலாநிதி நாகலிங்கம் சிவயோகன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், ஆளுநரின் பிரகடனத்தையும் அவரிடம் இருந்து பெருமையாக பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 4000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்று தமிழரின் ஒற்றுமையும் கலாசார செழிப்பையும் வெளிக்காட்டினர்.
இந்நிகழ்வில் நேரடியாக பங்கேற்காதிருந்தாலும், 'நேரு இளைஞர் நலச் சங்கம் (Nehru Youth Welfare Association)' தலைவர். மதன் குமார் அவர்கள், கலாநிதி நாகலிங்கம் சிவயோகன் அவர்களுடன் தொடர்பில் இருந்து, அவருக்கு கிடைத்த இந்த வரலாற்று மரியாதையை பகிர்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
தமிழுக்கு இந்த அளவிற்கு மரியாதை கிடைத்ததை உலகறியச் செய்வது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாக இருக்கவேண்டும் என்பதையும், இந்தச் செய்தியை உலகத் தமிழரிடம் கொண்டு சேர்க்க விரும்புவதாகவும் மதன் குமார் கூறுகிறார். அவர் சமூக நலத்திற்காக பல அருமையான பணிகளை செய்து வருவதோடு, அமெரிக்காவில் மருத்துவ பில்லிங் தொழிலில் (Medical Billing Service) வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் கலாசாரப் பணிகளிலும் உறுதியாக உள்ளார்.தமிழ் பேசும் இடமெல்லாம் ஒரு தாய் மண், தமிழ் பேசும் மனிதனெல்லாம் ஒரு தோழன்!
தேனிசெய்தி செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக