திண்டுக்கல் அருகே மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்த இளைஞர்கள்!!

திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி கோயில் விழாவில் இளைஞர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர்.

சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் மதுராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழாவில், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்வது பிரசித்தி பெற்றது. இந்தாண்டு விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பிருந்தாவனத் தோப்பு ராம அழகர் கோயிலில் இருந்து, சஞ்சீவி தீர்த்த அழைப்பு நடந்தது. இன்று  அம்மன் அழைப்புக்காக அம்பாத்துறை அருகே உள்ள போர் கொண்டைக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பாரம்பரிய வழக்கப்படி, அம்பாத்துறை ஜமீன் துரைப்பாண்டியன் மாக்காள நாயக்கர் அழைப்பு நடந்தது. பத்ரகாளியம்மன் கோயிலில் ஜமீன் தானமாக வழங்கிய குதிரைக்கு வழிபாடு நடந்தது. போர்பண்டையில் இருந்து அம்மன் கத்திக்கு பூ அலங்காரம், காதோலை, கருகமணியுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.  குதிரை வாகனத்தில் கோயில் நோக்கி கரக ஊர்வலம் நடந்தது. விரதம் இருந்த தேவாங்க செட்டியார் சமூகத்தினர், சவுடம்மா தீசுக்கோ என்ற கோஷத்துடன் மார்பில் கத்தி போட்டு படி அழைத்து வந்தனர். பின்னர் கோயிலில் அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்