கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை!!
கோவை மாவட்டம்,அ சூலூர் அருகே 10 வயது சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை.
இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப் பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமிதான் காணாமல் போனவர் என்பதும், அவரை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச்சென்றதும் தெரியவந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை கடத்தி சென்றவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசியதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சிறுமி கொலை தொடர்பாக கார்த்தி, மோகன்ராஜ் என்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.”
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக