முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் வீரவணக்கம்!!
1920 ஏப்ரல் 3. உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்திற்கு கை ரேகை வாங்க போலீஸ் பட்டாளம் வந்தது. கள்ள நாடே கிளர்ந்து எழுந்தது. நாட்டுப் பெரியவர்கள் ஒன்று திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. பக்கத்து ஊர்காரர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. காளப்பன்பட்டி, குமரம்பட்டி, போத்தம்பட்டி ஊர்களிலும் ஜனங்கள் தயாராகினர். பெருங்காமநல்லூர் மக்களுக்கு ஆபத்தான நிலை ஏற்படுமானால் "படாங்கு" வேட்டுச் சத்தம் வெடிக்கப்படும். வேட்டுச் சத்தம் கேட்டவுடன் பக்கத்து ஊர்காரர்கள் விரைந்து வந்து உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாயக்கமார்கள், ரெட்டியார்கள், பிள்ளைமார்கள், முதலியார்கள் போன்ற இதர சமூகத்தினரும் ஆதரவாக இருந்தனர்.
வீரன் விட்டி பெருமாள் தேவர் சிலம்பக் கலைஞர்களை ஒன்று திரட்டினார். இளைஞர்கள் ஆர்ப்பரித்தெழுந்தனர். பெருங்காமநல்லூர் ஒரு யுத்தத்திற்கு தயாரானது.
அதிகாரிகள் ஊர் மந்தையில் குவிந்தனர். ஆண் பெண் அனைவரும் மந்தையை நோக்கித் திரண்டனர். மந்தயைில் உள்ள மரத்தில் அதிகாரிககளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மரம் முழுவதும் வெற்றிலை மென்று எச்சிலை துப்பி சிவப்பாக்கி வைத்திருந்தனர்
ஒரே கூட்டம்!
கூச்சல் . கோபாவேசத்தோடு ஜனக்கூட்டம். ஆயுதப்படை கிராமத்தை சுற்றி முற்றுகை போட்டது. கட்டுக்கடங்காத கூட்டம். செம்புழுதி பறக்க நாலாபக்கமும் ஓடவும் ஆடவும் சீட்டி அடிக்கவும் சிலம்பம் சுற்றவுமாக இளைஞர்கள். மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே போனது.ரேகை சட்டத்திற்கு மக்களை அடிபணியவைக்கும் விதமாக பெரியவர்களிடம் தொடர்ந்து விவாதம் நடக்கிறது.
ஒரு கட்டத்தில் ஆயுதத்தை உயர்த்தி ரேகை பெற முயற்சிக்கின்றனர்." அடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, ஊரை விட்டுப் போங்கடா; இல்லையேல் உங்களை வெட்டி காத்தண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்" என்று முழங்குகிறார் விட்டி பெருமாள் தேவர்.
ரேகையைப் பதிவதற்கு போலிஸ் சிலரை பிடித்தனர். மக்கள் போலிசார் மீது பாய்ந்து ஆட்களை மீட்க முனைந்தனர். உசிலம்பட்டி டெபுடி தாசில்தார் ஜான் அன்பு நாடார் சுடுவதற்கு ஆணையிட்டார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜீ பிள்ளையும் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாச நாயுடுவும் ஏட்டு காளிமுத்து சேர்வையும் மற்றும் போலிஸ் பட்டாளமும் சரமாரியாகச் சுட்டது.அதற்கு முன் வரை துப்பாக்கியை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை வெடி சத்தம் மட்டும் கேட்கிறது வரிசையாக விழுகின்றனர் விழுந்தவர்களுக்கு மாயக்காள் தண்ணீர் கொடுக்கிறார் அவர் மீது குண்டு பாய்கிறது.வேலூரின் சிப்பாய் கலகத்திற்கு பிறகு 120 ஆண்டுகளுக்கு பின் ஆங்கிலேய அரசை ஆயுதங்களுடன் எதிர்த்து வீரமரணமடைந்த பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளுக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் வீரவணக்கம்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக