ராணிப்பேட்டையில் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் முயற்சி: இரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், இரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கபீர் தாஸ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டப் பொருளாளர் ஞான உதயம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ராஜி, சதீஷ்குமார், மாவட்ட இணைச் செயலாளர்கள் உதயகுமார், விநாயகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், பவானி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் ரவி மற்றும் மாநில அமைப்பு செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

 கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமாக, 'டி' கிரேடு அடிப்படை ஊதியம் ₹15,700 வழங்கிட வேண்டும்.

  சி.பி.எஸ் (CPS) திட்டத்தில் அரசின் பங்கீட்டுத் தொகையை நிலுவையின்றி உடனே வழங்கிட வேண்டும்.

"தமிழக அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் காலதாமதம் செய்தால், போராட்டம் அடுத்த கட்டத்திற்குத் தீவிரமாகும்" என்று நிர்வாகிகள் எச்சரித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கிராம உதவியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மறியலுக்கு முயன்றவர்களைக் வாகனங்களில் ஏற்றிச் சென்று, தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.


கருத்துகள்