இலுப்பூர் மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா!!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா,  மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்,  இன்று 12-வது பட்டமளிப்பு  விழாவானது,   கல்விக் குழும நிறுவனர் திருமிகு. இரா.சின்னத்தம்பி அவர்கள் தலைமையிலும்,  கல்விக் குழுமத் தலைவர் திருமிகு.ரா.சி.உதயகுமார் அவர்கள் முன்னிலையிலும்  இனிதே நடைபெற்றது.  இதில் கட்டிட பொறியியல்,  இயந்திரவியல்,  மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்புத்  துறை,  மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கணினி பொறியியல் ஆகிய துறைகளில் பயின்ற மாணவர்கள் சுமார் 200 பேர் பட்டங்களைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் சு.முருகானந்தம், வரவேற்புரையாற்றி துவக்கி வைத்தார். விழாவில் கல்விக் குழுமத்  தலைவர் திருமிகு.ஆர்.சி.உதயகுமார்,  பட்டம் பெற்ற மாணவர்களிடம் உரையாற்றும்போது,  நீங்கள் எங்கு பணியாற்றினாலும் உங்களின் கடின உழைப்பு மட்டுமே உங்களுடைய  வாழ்வை உயர்த்தும் எனக்  கூறினார்.  சிறப்பு விருந்தினரான முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், இந்நாள் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசுகையில்,  செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் அதிகமாக இருக்கும் இந்த காலத்தில்,  உங்கள் அறிவு நுட்பமானது,  அதற்கு சவால் விடும் அளவில் அமைய வேண்டும்.  அப்படி இருக்கும் பட்சத்தில்,  பல நிறுவனங்கள் உங்களைத்  தேடி வந்து, நல்ல வாய்ப்புகளை வழங்கும் எனக் கூறி வாழ்த்தினார். 

இந்த  நிகழ்ச்சியில்,  ரோட்டரி இன்டர்நேஷனல் துணை ஆளுநர்,  எக்ஸல் குழுமத் தலைவர்,  பொறியாளர்.M.முருகானந்தம் மற்றும் தஞ்சாவூர், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழக,  இயந்திரவியல் துறை,  முதன்மையர், முனைவர்.S.புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு,  பட்டமளிப்பு விழா ஏற்புறையாற்றினர். அவர்கள் தம்உரையில், இன்றைய உலகமானது போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. ஆகவே நீங்கள் அனைவரும் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்.  அப்பொழுதுதான்  சரியான பணி உங்களைத் தேடி வரும் என கூறி மாணவர்களை வாழ்த்திப்  பேசினர்.  இந்த விழாவில் கல்வி குழுமம் இயக்குனர் முனைவர். திருமா. பூங்குன்றன்,  பதிவாளர்,  பேராசிரியர் மு.தினேஷ்குமார் ஆகியோர் விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.  இந்த விழா முழுவதையும்  உதவிப்  பேராசிரியர்களான திரு.க.ரவிக்குமார் மற்றும் லெட்சுமி பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவிற்கான  ஏற்பாடுகளை அனைத்து துறைத்தலைவர்களும் பேராசிரியர்களும் சிறப்பாகச்  செய்திருந்தனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்