திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு!!


திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, சுமார் 1,595 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்றைய நிகழ்ச்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து  212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதே விழாவில், சுமார் இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 864 பயனாளிகளுக்கு 1082 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார். 

திண்டுக்கல் மாவட்டத்திற்கு என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்: மாநகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும், இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும், புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும், முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டியில் ரூ.7 கோடியில் அமைக்கப்படும், கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும், ஒட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும், ஏற்றுமதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான மற்றும் நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்த ஆணையிட்டு உள்ளேன் இதன் மூலம் 6.5 லட்சம் பணியாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2 கோடியே 22 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி-சேலைகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக மொத்தம் 7,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னையில் இத்திட்டத்தை  தொடக்கி வைக்க உள்ளேன்‌.

முந்தைய அதிமுக ஆட்சியில் மடிக்கணினி வழங்கும் திட்டம் முடக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தற்போது 20 லட்சம் தரமான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, "அவதூறு ஷா" என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் 4,000 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்துள்ளதாகவும், 7,701 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டுள்ளதாகவும் அவர் பட்டியலிட்டார். "தமிழகத்தை தமிழர்கள் ஆளவேண்டுமா? அல்லது டெல்லியில் இருப்பவர்கள் ஆளவேண்டுமா?" என்பதே 2026 தேர்தலின் சவால் எனத் தெரிவித்த முதலமைச்சர், திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைத்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியளித்தார்.

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்