நத்தம் அருகே பால் வேன் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலி!!
திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து அருகேயுள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் (42). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் மினி வேன் ஒட்டுநர். இவர் வேனில் பாலை ஏற்றிக்கொண்டு மதுரை மாவட்டம், சேக்கிபட்டிக்கு பாலை எடுத்துச் சென்று அங்கு இறக்கிவிட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நத்தம் அப்பாஸ்புரம் அருகே புதன்கிழமை அதிகாலை வந்த போது சாலையில் உள்ள (சென்டர் மீடியினில்) சாலை மைய தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே சம்பவ இடத்தில் பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ஓட்டுநர் உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலை கூற்ஆய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து கொட்டாம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, எரமநாயக்கன்பட்டி, காட்டுவேலம்பட்டி, மெய்யம்பட்டி, அப்பாஸ்புரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள (சென்டர் மீடியன்களால்)சாலை தடுப்புச் சுவரில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விபத்துகளும் 25-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் ஒளிரும் பட்டைகளைக் கொண்டு முறையான அறிவிப்புப் பலகைகளை வைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.



கருத்துகள்
கருத்துரையிடுக